நிராமய — J.R. கருத்துரை
By Smt Janaki Ramanan, Pune.
You may read in English the meaning of the song niramaya by clicking the underlined hyperlink.
விராலிமலை வேந்தே சரணம். "விராலிமலைக்கு வா, வா" என அருணகிரிநாதரை அழைத்து, திருப்புகழ் என்னும் அமுத ப்ரவாகம் கங்கையாய்ப் பொங்கி வருவதற்கு வழி செய்து விட்டான் வடிவேலன். "நிராமய " என்று தொடங்கும் பாடல் ஒன்றிலேயே திருப்புகழின் சாரம் முழுவதும் அடங்கி விடும் அற்புதம். தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனதான என்று துள்ளி வரும் சந்தம் . "ரா" என்ற எதுகை பாடல் முழுவதும் பரவி நிற்கும் இன்பம். பொருள் பொதிந்த ஒவ்வொரு சொல்லாகப் பார்ப்போம்.
- நிராமய
நோய் இல்லாதவனே. காரணமாம் வாசனைகளால் வரும் பிறவிப் பிணியும், காரியங்களாம் வினைகளால் வரும் மற்றப் பிணிகளும் இல்லாதவன். அவனுக்கு ஏது பிறவி! அவனுக்கு ஏது வினைகள்? அதனால் நிராமயன் - புராதன
பழமைக்கும் பழமையானவனே, ஆதி முதல்வனே, ஆறுமுகா - பரா பர
கலை ஞானங்கள் கடந்த மெய்ஞானமே, மெய்ப் பொருளே, அனைத்துக்கும் மேம் பட்டவனே - வராம்ருத
வரங்கள் மூலமாக சுகங்களை வாரி வழங்குபவனே - நிராகுல
துன்ப நிலைகள் கடந்த ஆனந்தமே - சிராதிக ப்ரபையாகி
சிரசின் உச்சிக்கு மேல் 12 அங்குல உயரத்தில் உள்ள துவாத சாந்த நிலத்தில் ஒளிப் பிழம்பாய் பிரகாசிப்பவனே. பரம யோகிகளுக்கு அவ்வாறு தரிசனம் தருகிறான். மொத்தத்தில் அவன் சத் சித் ஆனந்தன் தானோ! - நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய
பற்றுக்களை முற்றும் விட்டு, சிவஞானம் பெற்று சிவயோகம் பெற்ற தவ ச்ரேஷ்டர்கள் போற்றிப் பரவித் துதிக்கின்ற - நிராயுத புராரி
ஆயுதம் இல்லாமலே, சிரிப்பால், நெற்றிக்கண் நெருப்பால், திரிபுரம் எரித்த சிவன். - அச்சுதன் வேதா
காக்கும் கரங்கள் கொண்ட திருமால், வேதங்களை கரத்தில் ஏந்தும் பிரமன், மற்றும் - சுராலய, தராதல, சராசர பிராணிகள்
விண்ணுலகம், மண்ணுலகம் இவற்றில் உள்ள, இயங்குபவனவாகவும் நிலையாகவும் உள்ள உயிர்க்கூட்டங்கள் - சொரூபம் இவர் ஆதியை
இவற்றில் உயிரோட்டமாய் ஊடுருவி, வியாபித்து நிற்கும் பரமாத்மனே, - குறியாமே
அப்படிப்பட்ட பரமாத்மாவான உன்னை த்யானிக்காமல், சரண் அடையாமல், வழி மாறுவேனோ முருகா! - துரால் புகழ்
குப்பை கூளம் போன்ற புகழுக்கு ஆசைப்பட்டு - பராதின
சுதந்திரங்களை இழந்து - கரா உள பராமுக துரோகரை தராசையுற்று அடைவேனோ
முதலை போன்ற மூர்க்கத்தனமும், காரியம் முடிந்தவுடன் காலை வாரும் துரோக சிந்தனையும் கொண்டோருடன் இணைந்த வாழ்வும், வளமும் தேட ஆசைப்படுவேனோ! இனி ஒருக்காலும் இல்லை. நீ மட்டுமே கதி, நீல மயில் வாகனா! - இராவணன்
அன்று இறுமாப்புடன் கைலாச மலையைத் தூக்க முயன்று, சிவன் அதைக் கால் நகத்தால் அழுத்தியதும் அலறி அழுதவனும், - இரா வணன்
இரவைப் போல் கறுத்த நிறத்தவனும் - இராவண ராஜன் உட்குடன் மாய வென்ற
இலங்கை அரசனுமான இராவணன் அஞ்சி நடுங்க அவனை வென்று மாய்த்த - இராகவ இராமன்
ரகு குலத் திலகமான ராமனாம் திருமால் - இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா
அன்பு உடையவனாகிய விஷ்ணு, ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சித்து அதில் ஒரு மலர் குறைந்ததால், தன் தாமரை விழியையே மலராக்கிப் பூஜிக்க, அவருக்குச் சக்ராயுதம் அளித்த சிவனின் திருக் குமரா! அது கதை இல்லை வரலாறு எனக் குறிக்க நிஜ புராணர் என்றார். - கலை இராஜ சொல் அ வாரணர்க்கு இளையோனே
கலை ஞானங்களுக்காக வேண்டப்படுபவரும், அந்த ஞானங்களுக்கெல்லாம் மேலான மெய் ஞானம் உணர்த்துபவரும் ஆன ஞான முதல்வராம் கஜமுகனுக்கு இளைய சகோதரனே! - விராகவ
ஆசாபாசம் கடந்தவனே - சுராதிப
தேவர்கள் தலைவா - பொராது தவிராது அடு
போர் போன்ற வீரத் திருவிளையாடல் செய்து (போர் புரியாமல், தவறுதல் இல்லாமல் அடுதல் வல்ல) பகைவரையும் மறக்கருணையால் ஆட்கொள்பவனே - விராயண பராயணச் செரு ஊரா
அந்த மறக் கருணையும் உன்னிடம் உண்டு என்று உணர்த்தத் திருப்போருர் தலத்தில் கோயில் கொண்டவா - விராவிய குரா அதில் பராரை முதிரா வளர் விராலிமலை இராஜதப் பெருமாளே
செழித்த குரா மரங்களும், பருத்து முதிர்ந்த அகில் மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் விராலிமலையின் வேந்தனே, வேலவா சரணம்!
Comments
Post a Comment