வம்பறாச் சில கன்னமிடும் -- JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song vambaRa(வம்பறாச் சில) in English, click the underlined hyperlink.

முன்னுரை

காஞ்சித் தலைவனே சரணம். "வம்பறாச் சில கன்னமிடும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். 'நகரேஷு காஞ்சி ' எனக் கொண்டாடப்படும் எழில் நகரம். ஆன்மீகச் சிகரம். பஞ்ச பூத ஸ்தலங்களில் பொறுமைக்கும், அருமைக்கும், பெருமைக்கும் எடுத்துக்காட்டான நிலமாகிய மண்ணின் ஸ்தலம். முக்தி வாசல் திறக்கும் ஏழு புனித ஸ்தலங்களில் ஒன்று. ஏகன் அவன் என உணர்த்த மிக உயர்ந்து நிற்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலய கோபுரம். கட்டிடக் கலையின் நுணுக்கங்கள் கொட்டிக் கிடக்கும் கைலாசநாதர் கோவில். வர மழை பொழியும் வரதராஜன் ஆலயம். ஞானத்தை ஒரு விழியாகவும், கருணையை மறு விழியாகவும் கொண்டு அன்னை காமாட்சி ஆட்சி செய்யும் ஸ்தலம். கணித வல்லுனரையும் பிரமிக்க வைக்கும் ஸ்ரீசக்ர அமைப்பு. சிவசக்தி ஐக்கியமாய் அது அகிலம் காக்கும் சிறப்பு. அன்னை தானே தவமியற்றி வழிகாட்டும் தனித்துவம் கொண்ட தலம். கந்தக் கோட்ட சுந்தரக் கந்தன் அருணகிரியாரைச் சொக்க வைத்துக் காத்தம் போல் இழுத்த தலம். அவர் எண்ணத்தில் பூத்து மலர்ந்தன வண்ணத் தமிழ்ப் பாடல்கள் இந்தப் பாடலில் சீரிய சமூக சிந்தனை கொண்டவராய், விதண்டா வாதம் கடந்த சமரச சன்மார்க்கம் வேண்டுகிறார் அருணகிரியார். முருகன் அடியார்களுக்கு அது இயல்பு என உணர்த்துகிறார்.

வம்பறாச் சில கன்னமிடும் சமயத்துக் கத்துத் திரையாளர்

விளக்கம்: மதம் கொண்டவராய் , மதவாதம் செய்து கொண்டிருக்கும் சிறியர்களாம் சமயவாதிகள், சமய நூல்களின் சாரம் எதையும் உள்வாங்கிக் கொள்ளாமல், அவற்றிலிருந்து சில சொற்களைத் திருடி எடுத்து ஆரவாரமாய் கத்தும் கடல்போல் விதண்டா வாதம் செய்கிறார்கள்.

வன் கலாத் திரள் தன்னை அகன்று
மனத்திற் பற்றற்று அருளாலே

விளக்கம்: உன் அருள் நிரம்பப் பெற்ற அடியார்கள் உலகுக்கு வரப்ரசாதம். அந்த நல்லடியார்கள், புல்லறிவு பேசும் சமயவாதிகளிடமிருந்து விலகி நிற்கிறார்கள். புகழ் மீதும், பெயர் மீதும் பற்றற்ற தெளிந்த ஞானம் கொண்டிருக்கிறார்கள்.

தம் பராக்கற நின்னை உணர்ந்து உருகிப்
பொற்பத்மக் கழல் சேர்வார்

விளக்கம்: அந்த அடியார்கள் 'தான்' என்ற அகம்பாவத்தை அறவே அறுத்தவர்கள். உன்னை உண்மையாய் உணர்ந்து, உருகி, உருகி, ஒளி வீசும் உன் தாமரைப் பாதங்களைச் சுரண் அடைந்தவர்கள்.

தங்குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் கருதாதோ

விளக்கம்: அந்தச் சிறந்த தவசீலர்கள் இருக்கும் சத்சங்கத்தில் இந்த ஏழையையும் அன்புடன் சேர்த்து விடுவதற்கு நீ மனம் இரங்கலாகாதா முருகா! நீ சற்றே நினைத்து விட்டாலும் நான் பெறும் பேறுக்கு இணையுண்டோ!

வெம் பராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் பட

விளக்கம்; நீ தீயோர் மீது கொண்ட சினத் தீயாலே, வெம்மை கொண்ட உன் திருக்கை வேல், ஒரு மின்னல் போல் சென்று, க்ரவுஞ்ச மலையைத் தொடத்தான் செய்தது. க்ரவுஞ்சம் பொடியாய்ப் போனது.

மாசூர் வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் திருமார்பா

விளக்கம்: மாமரமாய் தன்னை மறைத்துக் கொண்ட சூரன் உடல் கிழித்து, அசுரர் கதை முடித்து, வெற்றி வாகை குடிய வேந்தனே. வெட்சி மாலை அலங்கரிக்கும் திருமார்பா!

கம்பராய்ப் பணி மன்னு புயம்
பெறுகைக்குக் கற்புத் தவறாதே
கம்பையாற்றினில் அன்னை தவம் புரி
கச்சிச் சொக்கப் பெருமாளே

விளக்கம்; ஏகம்பரராய் இன்று கோயில் கொண்டிருக்கும், சிவபெருமானின், பாம்புகள் விளையாடும் திண் புயங்களைப் பிரிந்து , பூலோகத்தில் வாடினாள் அன்னை காமாட்சி, அவருடன் அர்த்தநாரியாய், இணை பிரியாமல் இணைந்து விட வேண்டுமன்று, கம்பை ஆற்றினில் கடுந்தவம் புரிந்தாள் அந்தக் கற்பின் கனல். அந்தத் தவத்தின் பயனாக அவருடைய இடப்பாகம் கொண்டாள். அந்த சிவசக்தி ஐக்கியத்தின் பேரருளாய், பேராற்றலாய் வந்துதித்த முருகா! பக்தர்களைச் சொக்க வைக்கும் எழிலோடு காஞ்சியில் கோயில் கொண்டிக்கும் கந்தா சரணம். காந்தம் போல் இழுத்த தலம் என்று திருத்தவும்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே