எனக்குச் சற்று: J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song enakku chattru (எனக்குச் சற்று) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"எனக்குச் சற்று உனக்குச் சற்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஆசைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பவை. பெண்ணாசை, எப்படியெல்லாமோ பொருள் தேடும் ஆசையில் கொண்டு சேர்க்கிறது. இப்படிச் சேர்த்த பொருளை பங்கிட்டுக் கொள்ள, கழுகாய் காத்திருக்கும் கூட்டம் இருக்கும். எந்த ஆசையும் முழுவதுமாய் நிறைவேறப் போவதுமில்லை. தளர்ந்து முடியும் உடலின் பற்றுக்களை விட்டு, முருகனைப் பற்றச் சொல்கிறார். அவன் அடியார்க்கு எளியவன். ஜீவனைக் கடத்தேற்றக் காத்திருப்பவன் என்பதை நமக்குள்ளே பதிய வைக்கத் தான் நிலையாமை பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

விளக்கம்

பாடுபட்டுச் சேர்த்த பொருளையெல்லாம் தங்கத் தட்டில் வைத்து விலைமாதர்களுக்குக் கொடுத்தும் அவர்கள் திருப்தியுறாமல், உனக்கென்றும், எனக்கென்றும் சண்டையிட்டுக் கொள்ள, மிச்சம் மீதியை, உரிமை கொண்டாடிக் கொண்டு வருவோர் மொத்தமாய்த் துடைத்து விட, மாயையில் விழுந்து இந்தக் குடிலாம் உடல் பட்ட பாடு போதும் ஐயா! வெறும் கையுடன் வேதனை விளிம்பில், உடல் தளர்ந்து வீழ்ந்து, அக்னிக்கு இரையாகி, மறுபடி பிறந்து, உலகில் அதே பாடுகளைப் படுமுன் வந்து விடு கந்தா!

தினைப்புனத்திற்கே வந்து, வள்ளியை உன்னுடன் விருப்பமுடன் இணைத்துக் கொள்ளவில்லையா! அத்தப் பேறெல்லாம் எங்களுக்கு இல்லையோ!

அகம்பாவத்துடன், பொய்யும் புரட்டும் பேசிக் கொண்டிருப்பவர் கூட்டத்தில் கலந்து நான் கலங்குவதோ! அந்த வீணர்கள் கூட்டத்திலிருந்து என்னை விடுவிப்பாய். உன் தாள் பணிந்து பாடும் புலமை தாராய்!

நீண்ட துதிக்கையுடன், யானை முகம் கொண்டு வந்த, திமிருடன் கொக்குப் போல் நிமிர்ந்து நின்ற , தாரகாசுரனை நீ புரட்டிய புரட்டலில் கடல் கொந்தளித்து புரண்டது. ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனும் அச்சத்தில் மருண்டது. அத்தகைய புய வீரன் நீ இருக்க நான் புலம்பித் தவிப்பதோ!

பேராசை என்பதே இல்லாமல், கஞ்சத்தனம் என்பதும் இல்லாமல், குழப்பமற்ற தெளிந்த மனதுடன், ஈதல், இசை பட வாழ்தல் என்று இருக்கும் அடியார்களின் பெருஞ் செல்வமே, செவ்வேளே! அந்த சத்சங்கத்தில் எனக்கும் இடம் தாராய்!

ஒரு கனிக்காகப் பச்சைமயில் ஏறி, இச்சையுடன் ஒரு நொடியில் உலகம் சுற்றி வந்த, ஞானக் கனியே! இந்தக் கலியின் வெம்மையால் வாடும் உயிர்களைக் காக்க வேண்டுமென்ற சங்கல்பத்துடன், சக்தி மயிலாள் காமாட்சியாய் கொலுவிருக்கும் கச்சித் திருப்பதியில் சொக்க வைக்கும் எழிலுடன் கோயில் கொண்டிருக்கும் அழகா, சரணம்!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே