இருக்கும் காரண மீறிய : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune.

For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : இருக்கும் காரண மீறிய

முன்னுரை

திருச்செந்தூரில் மேவிய எம்பெருமானே சரணம். "இருக்கும் காரண மீறிய" என்று தொடங்கும் இனிய பாடல். "உருக்கம் பேசிய" என்ற பாடலின் பகுதி. எவருக்கும் அடங்காத தீய சக்திகளின் ஒட்டுமொத்த வடிவங்களான அசுரர்களை அழிக்க மூர்த்திகள் அம்பிகை இவர்களின் ஆற்றலை எல்லாம் உள்ளடக்கிய சிவசக்தி அம்சமாக அவதாரம் செய்தவன் முருகன் அவர்களின் தனித்தனி ஆற்றல்களை எல்லாம் இணைத்துக்கொண்டு தனிப்பெரும் ஆற்றலாய் வந்ததாலே எல்லா கடவுளரும் இவனை மையப்புள்ளியாக கொண்டிருப்பதால் வேதத்தின் சாரமான மெய்ப்பொருள் முருகன் தான் எனத் தெளிவு படுத்துகிறார் அருணகிரியார். பெரும்பான்மையான பாடல்களில் அசுரர்களை வென்று தேவர்களை காத்தவன் என்றும் பிரணவப் பொருள் சொன்னவன் என்றும் இந்தக் கருத்தைத்தான் அவர் வலியுறுத்துகிறார்.

இருக்கும் காரணம் மீறிய வேதமும்
இசைக்கும் சாரமே தொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கனனே

விளக்கம் : ரிக் வேதம் முதலான சதுர்மறை, தமிழ் வேதம் என்று போற்றப்படும் தேவாரம் எல்லாம் காரணகாரியம் கடந்த பர தத்துவத்தைப் பற்றித்தான் பேசுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் சாரமாயிருக்கும் மெய்ப் பொருளாம் பரம்பொருள் என்றும், ஆகம வழிபாடுகளின் அடித்தளம் என்றும் தேவர்கள் போற்றி வணங்குவது உன்னை அல்லவா முருகா! தேவர்களை சிறை மீட்டு குறை தீர்த்து, துயர் துடைத்த தனிப்பெருமை கொண்டவனே!

அடியார் தம்முடன மேவி
இலக்கம் தான் எனவே மகிழ்
விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உல
கிறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா

விளக்கம் : மௌன நிலை நின்று ஞான நிலை அடையும் தவசீலர்கள் அறியவும் அடையவும் துடித்து, அது நீதான் என உணர்ந்து மகிழும் பரம்பொருளாய், பழமைக்கும் பழமையான ஆதி முதல்வனாய் இருப்பது நீயல்லவா ஆறுமுகா. உலகங்களின் சம்ஹாரம் என்ற பெயரில் அவற்றை தன்னுள் இழுத்துக் கொள்பவரும் ஜடாமுடியராய் ஆத்திமாலை சூடியவருமான உன் அத்தனின் அம்சமாகவே அவர் குழந்தையாய் அவதரித்தவனே

. திருக்கும் தாபதர் வேதிய ராதியர்
துதிக்கும் தாளுடை நாயகனாகிய
ஜெகச் செஞ்ஜோதியுமாகிய மாதவன் மருகோனே

விளக்கம் : கனல் போன்ற தம் தவத்தின் பயனாய் முக்காலம் உணர்ந்த ஞானியர், யாகங்களால் விண்ணோரையும் மண்ணோரையும் மகிழ்விக்கும் வேதியர் முதலானோர் வணங்கும் திருவடிகள் கொண்டவராய். உலகத்தைக் காக்கும் பேரொளியாய் விளங்கும் திருமாலின் மருகோனே!

செழிக்கும் சாலியும் மேகமளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் பெருமாளே

விளக்கம் : கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்து, காற்றில் களிநடம் புரியும் நெற்பயிர்கள், தன் தோகையால் வான் தொடும் கரும்புத் தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள் என வளம் கொழிக்கும் திருச்செந்தூரில் நின்று பக்தர்களின் வாழ்வை வளமாக்கும் வள்ளலே, தேவர்களின் தலைவா!

அருக்கன் போலொளி வீசிய மாமுடி
அனைத்தும் தான் அழகாய் நலமே தர
அருட்கண் பார்வையினால் அடியார் தமை மகிழ்வோடே
அழைத்த்துச் சேதிகள் பேசிய காரண

விளக்கம் : வானோரை மட்டுமா நீ காத்தாய்! இன்றும் என்றும் அனைவரையும் காப்பவனே சூரியனைப்போல் ஒளியை வாரி இறைக்கும் உன் மணிமகுடங்களின் அழகைச் சொல்வேனா! அவை கொண்டு வந்து கொட்டும் நலங்களைச் சொல்வேனா !அருள் பொங்கும் விழியால் பார்த்து, அடியார்களை அருகில் அழைக்கும் உன் எளிமை சொல்வேனா! ஆதி முதல்வனாய் இருந்தும் அவர்களுடன் உரையாடும் உன் அருமையைச் சொல்வேனா! எதைச் சொல்வேன், எதை விடுவேன் ஐயா!

வடிப்பந் தான் எனவே எனை நாடொறும்
அதிக்கம் சேர்தரவே அருளால் உடன் இனிதாள்வாய்

விளக்கம் : நான் திருந்தி விட்டேன் என்பதை நீ ஒப்புக்கொண்டு விட்டாய் அல்லவா என் தலைவா! பேறுபெற்ற உன் அடியார் கூட்டத்துடன் இந்த சிறியவனையும் சேர்த்து விடு. மென்மேலும் என்னை உயர்த்தி உன் அருகே அழைத்துவிடு. உன் திருவருளால் இந்த ஏழையை ஆட்கொண்டு விடு. திருச்செந்தூரின் அருள் வெள்ளமே சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே