இரவியும் மதியும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song iravium mathiyum (இரவியும் மதியும்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"இரவியும் மதியும்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். ஜாஜ்வல்யமாய் எழுகின்ற சூரியனும், அமுதம் பொழியும் சந்திரனும் விழி முன்னே பிரத்யட்சம் அல்லவா! இயற்கை எழில் எல்லாம் நிதர்சனம் அல்லவா!இவற்றோடு இயைந்த வாழ்க்கையும் நிரந்தரம் அல்லவா! அப்படியானால் அந்த வாழ்க்கை என்பதன் அர்த்தமாய் விளங்கும் குலமும் குடும்பமும் பொய்யெனத் தள்ளிவிட முடியுமோ, என மனம் இன்பங்களை எண்ணி, எண்ணிப் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கணத்துக்குக் கணம் நம் கைவிட்டு நழுவும் காலம் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. இந்தக் காலத்தின் முடிவு, காலனின் வருகை என தீர்ந்து தெளிந்து விட்டால், மிச்சம் இருப்பது அச்சம் அல்லவா ! அதற்குள் எமைக் காக்க நீ வந்து விட்டால், அந்த ஞானம் தருவது எல்லையற்ற ஆனந்தம் அல்லவா ஆறுமுகா, என அருணகிரியார் உருகும் பாடல். மயில்வாகனின் மகிமைகள் சொல்லாமல் திருப்புகழ் பாடல் நிறைவு பெறுவதில்லை. இந்தப் பாடலும் விதிவிலக்கில்லை.

இரவியும் மதியும் தெரிவுற எழும் அம்
புவி தனில் இனமொன்றிடு மாதும்
எழில் புதல்வரும்

விளக்கம் : தினம் தினம் விழி முன்னே தகதகத்து எழுகிறான் கதிரவன். பிறையாய் எழில் சிந்தி, முழுமையாய் அமுதைப் பொழிகிறது நிலவு. கொள்ளை இன்பம் இந்த ப்ரபஞ்சம். நல்ல குலம், கோத்ரத்தில் பிறந்ததால் வரும் நிம்மதி. இளங்கிளி போல் மனைவி. பார்க்கவே இன்பம் சேர்த்துவிடும் குழந்தைகள். இவையெல்லாம் மாயை என்றால் இதயம் தாங்குமோ, முருகா!

நின்று அழுதுள முருகும்
இடர் கொடு நடலம் பல கூற
கருகிய உருவம் கொடுகனல் விழிகொண்டு
உயிரினை நமனும் கருதா முன்

விளக்கம் : வந்ததை எல்லாம் அனுபவித்த எனக்கு வருவதை அனுபவிக்கத் திறன் இல்லையே! நாள்தோறும், சுற்றிலும் பிறப்பு இறப்பு நடக்கத்தான் செய்கிறது கணக்கு முடிந்தது என்று, கரிய உருவமும், நெருப்பெனச் சிவந்த விழிகளும் கொண்ட காலன் வந்து நின்றால் — உள்ளம் உடைந்து மனைவி மக்கள் அழுது நின்றால் — என நினைத்து, நினைத்தே நெஞ்சம் நடுங்கி, ஓடுங்கி விடுகிறது. அந்த நிலைக்குத் தள்ளப்படுமுன் நீ வரவேண்டும், என் நம்பிக்கையின் ஒளியே, முருகா!

கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழலிணை கருதும் படி பாராய்

விளக்கம் : வேண்டாத கற்பனை பயங்களும் தேவையே இல்லாமல், சிந்தையில் சேர்த்துக் கொள்ளும் துன்பங்களும், அகன்று உன் பாத கமலங்களையே நான் நினைத்திருக்கும்பட ிஉன் அருள் கடாட்சம் என்மேல் படட்டும்.

திரு மருவிய திண்புயன் அயன் விரி
எண்டிசை கிடுகிட வந்திடு சூரன்
திணிபுயமது சிந்திட அலைகடல் அஞ்சிட
வலியொடு கன்றிடும் வேலா

விளக்கம் : அன்று, விண்ணோரையும் விட்டு வைக்காமல் ஆட்டிப் படைத்தான் அந்த சூரன். திருமகள் கேள்வன் திருமாலும், பிரம்மனும் கூட அஞ்சி விட்டனர். எட்டுத் திசைகளும் கிடுகிடுக்கப் போரிட வந்தான். உன் சின நெருப்பின் முன் அவன் சாகசங்கள் நிற்குமோ வடிவேலா! வேலடுத்தாய்; கடல்நீர் வற்ற வைத்தாய் ; சூரன் உடல் துணித்தாய்

அருமறையவர் அந்தரமுறைபவர்
அன்புடையவர் உய அன்று அறமேவும்
அரிவையும் ஒரு பங்கிட முடையவர் தங்கு
அருணையில் உறையும் பெருமாளே

விளக்கம் : வேதங்கள் ஓதி வாழ்வைச் செம்மைப் படுத்துவோரும், விண்ணோரும், உன் அன்பர்களும் உய்ந்து விட வேண்டும் என்று கணமும் அருள் பொழியும் கந்தவேளே! முப்பத்திரண்டு அறம் வளர்த்தவள் அல்லவா உன் அருமை அன்னை. பசியால் ஏழைகள் வயிறு வாடுவதைப் பொறுக்காமல் படி அளப்பவள். தாகத்தால் தவிப்போருக்குத் தண்ணீராய் வருபவள். செய்யும் தொழில் எல்லாம் தெய்வம் தான் என உணர்த்துபவள். உழவுக்கு வந்தனை செய்யச் சொல்பவள். இப்படி மனித குலத்துக்கு அறவழி காட்டும் தாயுடன், அவளை இடப்பாகம் கொண்டிருக்கும் தந்தையுடன் திருவருணையில் கோயில் கொண்டிருக்கும் அருள் உருவே, முருகா, சரணம் சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே