சைவ சித்தாந்தம் பகுதி 2 : முப்பொருள் இயல்பு

அனாதி முப்பொருள்

உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாதது பரம்பொருள் ஒன்றே. அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது. சைவ சித்தாந்தம் நிலையில்லா உலகில் அனாதியான அடிப்படை பொருளாக, அழியாப் முப்பொருள்களாக பதி, பசு, பாசம் விளங்குகின்றன என்று கருதுகிறது. இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்று இல்லாமல் மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று சைவ சித்தாந்தம் உரைக்கிறது. மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் முப்பொருள்களும் தொடக்கம் இல்லாதவைை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன. இதற்கு மூலக்ககூறாக இருப்பது சற்காரிய வாதம்.

என்றும் நிலைத்திருக்கும் முப்பொருள்கள் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது உயிரைப் பிணிக்கும் கட்டு அல்லது தளையையும் குறிப்பிடுகின்றன.

  • பதி / இறைவன் என்னும் சத்துப் பொருள் அறியாமையால் பற்றப்படாத, பாசம் என்னும் தளைகள் அணுக முடியாத, தூய முழுமையான அறிவினைக் கொண்டவன். அவன் ஐம்பொறி-புலன்கள் கொண்ட உடல் இல்லாமல் பிறர் அறிவிக்காமலே தானே எல்லாவற்றையும் அறிபவன். சூக்ஷ்மப் பொருளாகவும், பரந்தும், ஸ்தூலப் பொருள் உள்ளடங்கியும் (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருப்பவன். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது.
  • பசு / உயிர் சிற்றறிவுடைய ஆன்மா. இறைவன் உயிர்களோடு உடலில் உள்ள உயிர் போல ஒன்றாய் கலந்து நின்றாலும் இறைவன் உயிர் ஆகமாட்டான். உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை. ஆனால் மலங்களினால் பிணைக்கப்படும் போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணைப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும். பசு அறிவற்ற சடமும் அன்று, அறிவுடைய பொருளுமன்று. எதைச் சார்ந்ததோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்ந்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ந்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது. பசுவாகிய உயிர் பாசத்தோடு கூடி அறிவு மறைந்தும் தோன்றியும் மாறுதல் அடைந்தாலும் முத்திநிலையில் பதியைச் சேர்ந்த பின் ஒரு நிலையாய் நிற்கிறது.
  • தளை / பாசம் சடப்பொருள். அசத்து பொருள். அறிவற்றது. உயிர்களுக்குக் கருவியாக உடம்பையும், களமாக உலகத்தையும், படைத்துக் கொடுக்கப் பயன்படும் மூலப் பொருள் தான் பாசம் என்ற மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மற்றும் மாயை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டது. கானல் நீர் போல் இல்லாததை இருப்பதாகக் காட்டும் மாயையினால் கட்டுண்ட ஆன்மாவை இயக்குவது ஆணவ மலம். ஆணவ மலம் உயிருடன் இணைந்துள்ள, காலம் கடந்த இயற்கை மலம். இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது, அடக்க முடியும்.
    சுருக்கமாக கூறின்
  • இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
  • உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
  • மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

ஒரு பொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். அவற்றை முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பர். சான்றாக ஒரு குடம் தோன்றுவதற்கு முதற்காரணம் மண். அதற்கு உதவியாக இருக்கிற சக்கரம் போன்றன துணைக்காரணம். குடத்தை தோற்றுவிக்கும் குயவன் நிமித்த காரணன். தேர்ந்து பார்த்தால் இவ்வுலகம் முதலிய எல்லாப் பொருள்களையும் தோற்றுவிப்பதற்கு உரிய முதற்காரணம் மாயை ஆகும். எனவே அது மண் போன்றது. இறைவனுடைய சத்தி, சக்கரத்தைப் போன்று துணைக் காரணம் ஆகும். சிவபெருமான் குயவனைப் போன்று நிமித்த காரணன் ஆவான்.

மும்மலங்களும் ஆன்மாவுடன் சேர்ந்திருப்பதை நெல்லிலே முளை, தவிடு (bran) உமி (husk) சேர்ந்திருப்பதைக் காட்டி விளக்குவர் உமாபதி சிவம். அரிசி என்ற ஆன்மாவின் சுகதுக்கங்களுக்கு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமித்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைகின்றன. நெல்லில் அரிசி என்ற உயிர்/ஆன்மாவாகிய முளையைத் தோற்றுவிக்க கன்ம மலம் சுகதுக்கங்களை முதற்காரணமாக நின்று தோற்றுவிக்கும். மாயாமலம் அந்தத் துக்கங்கள் தோன்றுவதற்குத் துணைக்காரணமாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரையும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுவதற்கு நிமித்த காரணமாய் இருப்பது போல் ஆணவமலம் அந்தத் துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாக நின்று அவற்றை நிலைபெறச் செய்யும்.

இறைவன் உயிர்களை பிடித்து இருக்கும் பாசம் என்ற அறியாமையைப் போக்கவே, உடல்களுக்கு கருவிகளை தந்திருக்கிறான் உடல்கள் மூலம் மெய் அறிவு பெற்றால், உடல்களை விட்டு நீங்கும்போது உயிர்களுக்கு பிறவிகள் நீங்கிவிடும்!

இந்த முப்பொருள்களின் விளக்கமாக திருக்கோயில்களில் மூலவர் (பதி), நந்தி (பசு), பலி பீடம் (பாசம்) என்று அமைக்கப்பட்டிருக்கின்றன. நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும் பலிபீடம் அருகில் நின்று பலியிட்டு விழுந்து வணங்க வேண்டும் என்பது தான் இதன் தத்துவம்.

பதியின் இயல்பு

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே