பாற்கடல் கடைதல் - தத்துவ விளக்கம்

ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி : பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து,
ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக : ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி,
ஆழி கடைந்து அமுது ஆக்கி : பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து,
அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயன் : இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமால்
(திருப்புகழ் பாடல் 420. வேடர் செழுந்தினை)

பாற்கடல் கடைந்த கதை

ஒரு காலத்தில் இந்திரன் துர்வாச முனிவர் அளித்த மலர் மாலையை அலட்சியமாக தன்னுடைய யானைக்கு அணிவித்தான். யானை அதை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்ததை பார்த்த முனிவர் கடுங்கோபம் கொண்டு தேவர்களின் வலிமையும் அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம் தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். எல்லா அண்ட சராசரமும் அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.

தோற்று போன தேவர்களின் வலிமையை மறுபடியும் மீட்டு கொண்டு வர திருமால் அவர்களுக்கு பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெறுமாறு பரிந்துரைத்தார். மேலும், தான் ஆமை அவதாரம் கொண்டு மந்திர மலை பாற்கடலுள் மூழ்காமல் இருக்க அதை தாங்கி நிலை பெற செய்து, ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பை கயிறாக பிணைத்து, தேவர்கள் வாலையும் அசுரர்கள் பாம்பின் தலையையும் பிடித்து பாற்கடலை கடையுமாறு பணித்தார்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைந்தார்கள். கடல் கடையப்படும் போது, பல பொருட்கள் வெளிவர தொடங்கின. முதலில் மிகவும் கொடிய ஆல கால விஷம் வெளி வந்து தன் நெடியால் எல்லோரையும் தாக்கி பலரை மயக்கமடைய செய்தது. தேவர்களின் துன்பங்களை போக்க, சற்றும் யோசிக்காமல் சிவ பெருமான் ஆல கால விஷத்தை தன் வாய் வழியே பருக ஆரம்பித்தார். பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்து பகுதியை பிடிக்க, அந்த விஷம் சிவபெருமானின் கழுத்துலேயே தங்கியது.

மறுநாள் காலை துவாதசியன்று உச்சிஷிரவஸ், கௌச்துபம், சந்திரன், லக்ஷ்மி தேவி, அப்சரஸ் தேவதைகள், காம தேனு, பாரிஜாதம், கற்பகவிருக்ஷம், ஐராவதம், எல்லாம் கடலிலிருந்து வெளிப்பட்டன. கடைசியாக, தன்வந்திரி தேவன் அமிர்த குடுவையுடன் வெளியே வந்தார். அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர்.

விஷ்ணு பகவான் அழகிய "மோகினி" என்ற பெண் வடிவம் எடுத்து அமிர்தம் பகிர்ந்து கொடுக்க முன் வந்தாள். மோகினி தேவர்கள் மெலிந்து கிடப்பதை காரணம் காட்டி முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து விட்டு பின் அசுரர்களுக்கு அமிர்தம் கொடுப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி, அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தாள். அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்று பரமேஸ்வரனை மறந்து போதையில் இருந்தனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார்.

பாற்கடல் தத்துவ விளக்கம்

அமிர்தம் கடைதல் என்ற கதை வாசி யோகம் பற்றிய விபரங்கள் சொல்கிறது. இந்த கதையில் வரும் எல்லா கதா பாத்திரங்களும் ஒரு உருவகம். பாற்கடல் போல அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும் நம் மனம் மற்றும் உடல் (இந்திரன்) துர்வாசர் போன்ற சான்றோர்களின் சொற்களை புறக்கணித்து தாழ்ந்த கீழான நிலை பெற்று பலவீனம் அடைகிறது. நம் புலன்களை அடக்காமல் மனதை ஆராய்வது (கடைவது) என்பது இயலாத காரியம். ஏனென்றால் அதில் நல்லவை கெட்டவை என்று எல்லா எண்ணங்களும் ஒளிந்து கொண்டு உள்ளன; 5 புலன்களும் கட்டுப்பாடு என்னும் கூர்மத்தால் அடக்கப்பட்டு மனது கடையப்படும் போது அவை ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

பாற்கடலிலிருந்து அமிர்தம் கடைந்து எடுக்கும் புராணக்கதை ஸூக்ஷ்மமாக தெரிவிக்கும் தத்துவம் என்னவென்றால் யோக மார்கத்தால் நற்குணங்களையும் தீய குணங்களையும் சீர்படுத்தினால் மரணத்தை வென்று பெருவாழ்வு பெறலாம் என்பதே. பிரபஞ்ச வெளியில் இருந்து உடலுள் மூச்சாக வரும் காற்றை நெறிபடுத்தி மூலாதாரத்தில் பாம்பாக சுருண்டு கிடக்கும் குண்டலினி என்னும் சக்தியை ஆதாரத் தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகமாக செய்வது வாசி யோகம். மேருமலை முதுகுத்தண்டைக் குறிக்கிறது. முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது. மந்திர மலை என்பது பிரணவ மந்திரம் அல்லது குண்டலினி சக்தியை மேல் நோக்கி எழச் செய்யும் மந்திரம். இதன் உச்சரிப்பால் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி ஓடும் மூச்சுக்காற்று சுஷுமுனை நாடி வழியாய் மேல் எழுகிறது. குண்டலினி ஸ்வாதிஷ்டானத்தை கடக்கும் போது காம இச்சைகள் விஷமாக வெளி வந்து நற்குணங்களான தேவர்களுக்கு ஊறு விளைவிக்கின்றன. அவர்கள் ஆக்ஞா சக்கரத்தில் இருக்கும் சிவத்திடம் முறையிட்டு அவர் அருளை பெறுகிறார்கள். மந்திர மலையை தாங்கி பிடிக்கும் மணிபூரக சக்கரத்தில் இருக்கும் திருமால், ஆமை போல் லோக மாயையை அடக்கி, அந்த மந்திரத்துள் மனதை நிலை நிறுத்துகிறார். குண்டலினி சக்தி மேலே ஏறி சகஸ்ராரத்தை அடைகிறது; அசுரர்கள் வெளியேறுகிறார்கள்; மனம் பஞ்சேந்திரியங்கள் சிவத்திடம் ஒடுங்க, காமம் அடங்கி, சக்தி எழும்பி, அமுதம் சுரக்கிறது.

மேலும் பாற்கடலை கடையும்போது லட்சுமி, தன்வந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் போன்றவை வந்தது என்பது வாசியோகத்தில் சித்தி பெற்ற ஒருவனுக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேக பலம் கிடைக்கும் என்பதற்கான உருவகம். இதில் அமிர்தம் என்பது, முக்தி நிலை என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, நிலையான வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே