கந்தபுராணம் : பகுதி 16
கந்தபுராணம் : பகுதி 10 | கந்தபுராணம் : பகுதி 11 |
கந்தபுராணம் : பகுதி 12 | கந்தபுராணம் : பகுதி 13 |
கந்த புராணம் : பகுதி 14 | கநத புராணம் : பகுதி 15 |
சூரபத்மனுடன் போர்
இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். மூன்று நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற “இந்திரஞாலம்” என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் தூக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து இந்திரஞாலத்தை தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுத்தி தன் உடைமையாக்கிக் கொண்டார்.
அடுத்ததாக சிவனால் தனக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. இதே போல் சூரனது அம்புப் படையையும் வேல் பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் சக்கரவாக பட்சியாக உருமாறி வானில் பறந்து போரிட்டான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது அதர்மம் என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான். தன் உருவத்தைப் பெரிதாக்கி சூரபத்மன் அச்சுறுத்த முயன்றான். சரமாரியாக முருகன் ஏவிய அம்புக்கணைகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது.
சூரபத்மனுக்கு முருகன் காட்டிய விஸ்வரூப தரிசனம்
சூரனுக்கு சிறுவனான முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், பாவமென்றும் கருதினான். இதை அறிந்த கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார்.
சூரனுக்கு கடைசியாக திருந்துவதற்காக ஒரு வாய்ப்பு அளிக்க கந்தன் விஸ்வரூபம் எடுத்தார். எல்லாமே தனக்குள் அடக்கம் என்பதை அவர் அவனுக்கும், இந்த உலகத்துக்கும் காட்டினார். அந்தக் காட்சியால் சூரன் ஞானம் பெற்றான். தனது துர்க்குணங்கள் மறையப் பெற்ற சூரன் கந்தனை மெய் மறந்து வணங்கினான்.
'முருகா! என் ஆணவத்தை நீ அழித்தாய். இது என் பாக்கியமே. நான் இந்தக் கடலின் வடிவாகவே இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும்,' என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார்.
அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவரிடமிருந்து தப்புவதற்காக செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமர உருவில் மறைந்தான். முருகன் அவன் மேல் வேலை எறிந்தார். அது மாமரத்தை இருகூறாக பிரித்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.
இறைவனுடைய கருணை இரண்டு வகைப்படும். 1 - அறக்கருணை; 2 - மறக்கருணை. ஒரு பாவமும் செய்யாத தூய்மையான குணம் கொண்டவர்களை இறைவன் தம் அறகருணையால் ஆட்கொள்கின்றான். ஆணவம் கொண்டவன் ஒருபொழுதும் இறைவனை காண முடியாது. உயிரை எடுத்தால் அன்றி சூரபத்மனின் ஆணவம் அடங்காது என்று உணர்ந்த முருகப்பெருமான் சூரனை தம்முடைய வேலாயுதத்தால் ஆட்கொண்டு உடலினை இரு கூறாக்கி ஒரு கூறு மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாற்றி தம்மோடு சேர்த்து கொள்கிறான். சூரனை- கந்தவேலன் சம்ஹரிக்கவில்லை . தம் மறகருணையால் தம்வசப்படுத்தி கொள்கின்றான் என்பது சூரசம்ஹாரத்தின் தத்துவமாகும்.
தன் கணவரின் ஆயுள் முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்ட சூரபத்மனின் பட்டத்தரசி பத்மகோமளாவும் மற்ற மூவாயிரம் மனைவியரும் இறந்து போனார்கள்.
Comments
Post a Comment