நால்வர் வரலாறு : 1. திருஞானசம்பந்தர்
சமயக்குரவர் என்பவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர்களை நால்வர் என்று சைவ சமயத்தினர் அழைக்கின்றனர். இவர்களில் முதலானவர் திருஞானசம்பந்தர்.
காழிப்பிள்ளை என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சம்பந்தர் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மாளுக்கும் மகனாக ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். சம்பந்தரது மூன்றாவது வயதில் தோணியப்பர் கோயிலுக்கு கூட்டிச் சென்ற அவரது தந்தையார் ஆலயக் குளக்கரையில் அமர வைத்துவிட்டு நீராடச் சென்றார்.
நெடுநேரமாகியும் நீருக்குள் மூழ்கிய தந்தையைக் காணாத குழந்தை அழத்துவங்க தோணியப்பர் உமையொருபாகனாக நந்தியம்பெருமானுடன் எழுந்தருளினார். அம்மையோ மடிமீதெடுத்து ஞானப்பாலூட்டினார். குளத்திலிருந்து எழும்பிய தந்தையோ திருவாயில் பாலுடன் காட்சியளித்த பிள்ளையை கோபிக்க பிறந்ததே “தோடுடைய செவியன்” எனும் முதற்பதிகம். அம்பிகையின் ஞானப்பால் உண்டதால் ஞானசம்பந்தர் என அழைக்கப்பெற்றார்.
பின்னர் பதிகள் தோறும் தந்தையார் மீதமர்ந்து சென்று பதிகங்கள் பாடினார். அவ்வாறு செல்கையில் திருக்கோலக்கா (சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது) வந்தார். திரு ஞான சம்பந்தர் பாடும் பொழுது தம் மலர் போன்ற கரங்களால் ஓசை வருவதற்கு சற்று பலமாக தட்ட, அதனால் பிஞ்சுக்கைகள் சிவந்து போயின. தன் செல்வக்குழந்தைக்கு நோகாதபடியும் தாளம் ஒலிக்கும் படி பொன்னாலான தாளங்கள் (ஒரு கையில் ஒன்றாகப்பிடித்துத் தாளத்துக்கேற்றவாறு தட்டும் வெண்கலம்/ பித்தளையில் செய்த தாளவாத்தியம்; ஜால்ரா என்று இன்று வழங்கப்படுவது) கொடுத்தருளினார். அதில் ஓசை வரவில்லை. பின் அம்பிகை குழந்தையின் ஏமாற்றம் சகியாது ஓசை எழச்செய்து ஓசை (கொடுத்த) நாயகி ஆனாள்.
திருநீலகண்டயாழ்ப்பாணரின் (அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்) நட்பைப் பெற்ற சம்பந்தர் தலங்கள்தோறும் சென்று பாடி வருகையில் திருநெல்வாயில் இறைவன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி முத்துச்சிவிகையும் குடையும் கொடுத்து அழைத்து வரப்பணித்தார். அவர்களும் சம்பந்தருக்கு அளித்து அழைத்து வந்தனர்.
திருச்சக்திமுற்றத்தில் வழிபட்டபின் பட்டீஸ்வரம் செல்கையில் ஆனி மாதமாதலால் வெயில் கொளுத்தியது. சம்பந்தரின் கால்கள் சுடக்கண்ட ஈசன் முத்துப்பந்தல் அளித்தார். குழந்தை நடந்து அழகைக் காணவும் அவர் தம்மை தரிசிக்கவும் நந்திதேவரை விலக கட்டளையிட்டார். நந்தியும் விலகியது. இங்கு பிறந்ததே பாடல் மறை எனும் தேவாரம்.
திருப்பாசிலாச்சிராமத்தை அடைந்த சம்பந்தர் அங்கு முயலகன் நோயால் உணர்வின்றி கிடந்த மழவனின் புதல்வியை “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்ற பதிகம் பாடி குணமாக்கினார். திருவீழிமிழலையில் “வாசிதீரவே காசு நல்குவீர்” எனப் பாடி அடியார்களுக்கு அமுதளித்தார்.
இவ்வாறு தலங்கள்தோறும் சென்று பாடி அற்புதங்கள் நிகழ்த்தும் குழந்தை சம்பந்தரைப் பற்றி கேள்விப்பட்ட பாண்டியன் மனையாள் மங்கையர்க்கரசி அவரை மதுரைக்கு வருமாறு விண்ணப்பித்தார்.
மதுரையில் நின்ற சீர் நெடுமாறனாய் விளங்கி வெம்மை நோயால் அவதியுற்று கூன்பாண்டியனைக் கண்டார். சமணமதத்தை தழுவிய பாண்டியனிடம் நோய் தீர்ந்தால் சைவ மதம் சார்ந்து இருக்கும்படி பணித்தார். “மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு” எனப்பாடி நோய் தீர்த்தார். இதையே எதிரிலாத பக்தி (பாட்டு எண் : 151) திருப்புகழில் வழுதி கூனி மிர்த்த பெருமாளே என்று அருணகிரிநாதர் புகல்கிறார்.
மேலும் மயிலாப்பூரில் அரவம் தீண்டி இறந்த பூம்பாவையை "மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” பதிகம் பாடி சாம்பலில் இருந்து பெண்ணாக உயிர்பித்தார்.
இறுதியாக ஆச்சாள்புரம் தலத்திலுள்ள திருபெருமணம் கோயிலை அடைந்த சம்பந்தருக்கு வைகாசி மூலத்தில் திருமணம் நடைபெற்றது. “கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனப்பாடி (கல் - அம்மி; கல்லூர் - அம்மி மிதிக்கும் சடங்கினையுடைய; பெருமணம் - உலக நிலையிற் கொண்டாடப்படும் கல்யாணம் செய்யும் இல்லற நிலை; வேண்டா - எமக்கு வேண்டுவதின்று.) அனைவருடனும் ஜோதியில் கலந்தார்.
நால்வர் வரலாறு : 2. திருநாவுக்கரசர்
நால்வர் வரலாறு : 3. சுந்தரமூர்த்தி நாயனார்
Comments
Post a Comment