இறைவனின் இயல்பு என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது. சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான்.