கந்த புராணம் : பகுதி 17
கந்தபுராணம் : பகுதி 12 | கந்தபுராணம் : பகுதி 13 |
கந்த புராணம் : பகுதி 14 | கநத புராணம் : பகுதி 15 |
கந்த புராணம் : பகுதி 16 |
இரணியன் புலம்பல்
சூரன் இரு கூறாகி வீழ்ந்ததும், சேவலும் மயிலும் ஆகிச் செவ்வேளிடம் சென்றதும் கேட்டு கலங்கினான், கடலில் மீன் உருவத்தில் பதுங்கி இருந்த அவன் மைந்தனாகிய இரணியன். "ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்ட நீ ஒரு சேவலாகவும் மயிலாகவும் மாறிப் போனாயே! ஒரு நல்ல மகனாய் உனக்கு உதவாமல் போய் விட்டேனே" என்று கதறினான். துன்புற்ற மனத்தோடு குல குருவாகிய சுக்கிரனிடம் சென்றான்; அவரது அறிவுரைப்படி இறந்த தந்தையர்க்கும், தாயர்க்கும், உடன் பிறந்தார்க்கும், மற்றைய சுற்றத்தார்க்கும் முறைப்படி எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன் கழித்தான்.
திருச்செந்தூரில் நாழிக்கிணறு
ஆறுமுகன் சூரனை வதம் செய்தது கதிர்காமம்! போர் வெற்றியை கொண்டாடும் தலம் திருச்செந்தூர். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள மற்றொரு கிணறு உள்ளது. அந்த கடற்பகுதியின் சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை உள்ள அனைத்து கிணறுகளிலும் உப்பு நீரே இருக்கும் நிலையில் கடலில் இருந்து வெறும் 100 முதல் 200 அடி தொலைவில் அமைந்துள்ள இந்த கிணறில் மட்டும் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். முருகன் அந்த கிணற்றின் நீரையும், மணலையும் கொண்டு முருகன் சிவலிங்கத்தை செய்து பூஜை செய்தார்.
பின், தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.
திருப்பரங்குன்றத்திலே மண நாள் அன்று பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்-பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீலமயில் மீது ஏறி, குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.
பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும் திருத்தணிகையில் மணம் புரிந்தார்.
Comments
Post a Comment