Thiruppugazh Isai Vazhipadu with lyrics, meaning in English and Tamil, and teaching audios of Guruji Shri A.S. Raghavan
Search
சில திருப்புகழ் பாட்டுக்கள் : J R விளக்கவுரை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
By Janaki Ramanan, Pune
Click anywhere on the panel to expand it and click once again to collapse. Clicking the red underlined words in the panel will take you to the English translation of the song.
அருணகிரிநாதரைச் சுற்றிச் சுழன்று சுழித்து ஓடும் பக்தி வெள்ளம் தான் இந்தப் பாடல். அந்தக் கந்தவெள்ளம் எந்த அழுக்கையெல்லாம் அடித்துச் சென்று விடும் தெரியுமா எனக் கேட்டு, நெஞ்சத்தில் நம்பிக்கை தழைக்க வைக்கும் பாடல். மரண பயம் பயந்து ஓடிவிட, காம இச்சை கலங்கிக் கதறி விலகிவிட, படைப்பின் அடித்தளமாக அமைந்த சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் விடைபெற்றுக் கொண்டு விட, ஞானம் மட்டும் மிஞ்ச, ஞான பண்டிதன் விஞ்சி நிற்க, பக்தன் நான் விம்மி நிற்க, அந்த இன்பநிலை தருவாய் செந்தில் வேந்தே என வேண்டுகிறார் அருணகிரியார்.
அந்தகன் வருந்தினம் பிறகிட
சந்ததமும் வந்து கண்டரிவையர்க்
கன்புருகு சங்கதத் தவிர முக்.....குணமாள
விளக்கம் : கணத்துக்குக் கணம் "வந்துவிடுவானோ, வந்து விடுவானோ" என்று எந்தக் கூற்றுவனுக்குப் பயந்துசப்தநாடிகளும் ஒடுங்க அமர்ந்திருக்கிறேனோ, அந்தக் காலன் என் எல்லைக் கோட்டைத் தள்ளிப் போட்டுவிட்டுத் தொலை தூரம் சென்று விட வேண்டும். அல்லும், பகலும் என்னை அங்கும் இங்கும் அலைக்கழித்து கவர்ந்திழுத்து, மழுப்போல் எரிக்கும் காம இச்சை, உன் பச்சை மயிலுக்குப் பயந்து, இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட வேண்டும். படைப்பில், மனிதகுலத்தின் ஆரம்பப் புள்ளிகளாம் சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் கூட விடைபெற்றுக் கொள்ளும் விந்தையும் நடந்து, சிந்தையில் அமைதி பூக்க வேண்டும்.
அந்தி பகல் இரண்டையும் ஒழித்
திந்திரிய சஞ்சலங்களை அறுத்து
அம்புயப் பதங்களின் பெருமையைக்.....கவிபாடி
விளக்கம் : உடலென்னும் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஜீவாத்மா, இரவு, உறக்கம் என்ற செயலற்ற பயனற்ற நிலையையும், பரிதாபமாய் உழல்கின்ற பகல் என்ற நிலையையும் கடந்து, துரிய வெளியில் சிறகடிக்க வேண்டும். ஐம்புலன்களின் ஆட்ட பாட்டங்கள் அடியோடு நிற்க வேண்டும். உன் தாமரைப் பாதங்களின் உன்னதத்தைப் பாடும் பரவசம் மட்டும் நிலைக்க வேண்டும், நித்திலக் குமரா!
செந்திலை உணர்ந் துணர்ந் துணர்வுற
கந்தனை அறிந்தறிந்த தறிவினிற்
சென்று செருகுந் தடம் தெளிதரத் ...... தணியாத
விளக்கம் : உத்தம பக்தியின் இலக்கணம் சொல்கிறார். "செந்தில் வேந்தே! பழக்கத்தின் காரணமாக மட்டுமே வரும் இயந்திரத்தனமான பக்தியுடன் உன்னை வணங்காமல், மெய்ப்பொருள் நீதான் என்ற உணர்வுடன் உன்னை நான் வணங்க வேண்டும். தெளிந்த ஞானம், உன்னை உள்ளபடி எனக்குக் காட்ட வேண்டும். அந்த ஞானஒளியில், என்னை உன்னிடம் கொண்டு சேர்க்கும் பாதை தெளிவாகத் தெரியவேண்டும்."
சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரையொழித்து
என் செயல் அழிந்து அழிந்து அழிய
மெய் சிந்தை வர என்று நின் தெரிசனப்..... படுவேனோ
விளக்கம் : தடைகளும், விடைகள் தெரியாத வினாக்களுமாய் இறுகிக் கிடந்த என் மனமும் சிந்தையும் பூவாய் மலர, என் கர்மங்களும், வினைப் பயன்களும் கரைந்து போக, 'நான்' என்பதே இல்லாமல் போக, மெய்ஞ்ஞான ஒளியில் உன்னை தெரிசிக்கும் பாக்யம் என்று எனக்குக் கிடைக்கும் முருகா!
கொந்தவிழ் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதிபெற
குஞ்சரி குயம்புயம் பெற அரக் ...கருமாளக்
குன்றிடிய
விளக்கம் : அலங்கரிக்கும் மலர்க்கூட்டமே தோற்கும் படியாக எழில் சிந்தும் உன் திருப்பாதங்களே கதி என தேவ ராஜன் உன்னைச் சரணடைய, அவனை அந்த கதிக்கு ஆளாக்கின அரக்கரின் காவற் கோட்டையாம் க்ரவுஞ்சம் தவிடுபொடியாக, அந்த அசுரக் கூட்டத்தை அழித்து முடித்து, தேவருலகம் மீட்டுத் தந்து, அதற்குப் பரிசாக, இந்திரன் மகள் சுந்தரத் தெய்வானையை கைத்தலம் பற்றிய கந்தா ! (உன்னை பால குமாரனாகவும் பார்க்க ஆசை ஐயா)
விளக்கம் : சிவசக்தி அம்சமாய் அவதரித்த செல்வக் குழந்தாய்! திருவரையில் அழகாய் நீ அணிந்திருக்கும் பொன் அரைஞாண் 'கிணின் கிணின் கிணி' என்று இசை எழுப்ப, அதற்கிசைய உன் மென்மையான பூப்போன்ற செவியின் குண்டலங்கள் அசைய, சிறிய காதணிகள் பளீர் பளீர் என்று ஒளி வெட்டி ப்ரகாசிக்க, சின்னஞ் சிறு பாதங்களின் சிலம்புகள் கொஞ்சிச் சிணுங்கி, இசை எழுப்பி என் பாடலுக்குச் சந்தம் கொடுத்து விட, தண்டைகள் உன் வீரத்துக்கு அன்றே கட்டியம் கூறிவிடத் தளர் நடையிட்டு வரும் அழகின் இலக்கணமே முருகா !
சங்கரி மனம் குழைந்துருக
முத்தம் தர வரும் செழுந் தளர்நடைச்
சந்ததி சகம் தொழும் சரவணப் ..... பெருமாளே
விளக்கம்: நீ தளர்நடையிட்டு வரும் அழகில் மயங்கி, அன்பில் உருகி, எழிலே உருவான சுந்தரியாம் உன் அன்னை சங்கரி உன்னை வாரி அணைத்து முத்தம் கொஞ்சும் முத்துக் குமரா! ஜெகமே தொழுது நிற்கும் சரவணபவா! சரணம் சரணம்!
வள்ளிமலை மேவு வள்ளி மணவாளா சரணம். "அல்லி விழியாலும் " என்று தொடங்கும் பாடல்.
கந்தன் விரும்பி விரைந்து வந்த அந்த வள்ளி மலைக்குத் தான் எத்தனை எத்தனை சிறப்புகள்! வேதங்கள் தேடுகின்ற முழு முதற் கடவுளான முருகனின் திருப்பாதங்கள் உலவிய வள்ளிமலை. "எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய இனிது பயில் சிறுமி வளர் புன மீது உலாவுவதும்" (சீர்பாத வகுப்பு) என்கிறார் அருணகிரிநாதர். அதாவது வேடுவர் கட்டி வைத்த பரணில் நின்று, தினையை உண்ணவரும் கிளிகளை விரட்டிய வள்ளி வளர்ந்த தினைப்புனத்தில் உலவிய திருப்பாதங்கள். "சுனையோடு அருவித் துறையோடு பசும் தினையோடு இதனோடு திரிந்தவனே" (வினை ஓட விடும் —அநுபூதி) அதாவது சுனை அருகிலும், அருவித் துறை அருகிலும், தள தளவெனத் தினை வளர்ந்த தினைப் புதைத்தும், வள்ளி காவல் செய்த பரணுக்கு அருகிலும், வள்ளிக்காகவும், வள்ளியுடனும் உலவிய திருப்பாதங்கள்-என்கிறார் அநுபூதியில். இச்சா சக்தியானவள் மான் மகளாய்ப் பிறந்து, வள்ளி என்ற பெயருடன் குறமகளாய் வளர்ந்து முருகனுக்காகக் காத்திருந்த மலை. திருமுருகன் வள்ளியை அடைவதற்காக லீலைகள் புரிந்த மலை. மலை உச்சியில் இருக்கும் சுனை வள்ளி நீராடிய சுனை என்ற சுவையான செய்தியும் உண்டு. முருகன் கருணையைப் போல் அந்தச் சுனையில் நீர் வற்றுவதே இல்லையாம். பங்குனி மாதத்தில் படி விழா நடக்கும் புனித மலை. அந்த நேரத்தில் வள்ளி அன்னையின் அருள் வேண்டி பக்தர்கள் குவியும் மலை. அவள் இகபர சுகம் தந்து வினைகள் அறுக்கும் புண்ணிய
பூமி. "அல்லி விழியாலும்" என்ற பாடலில் ஆசைகளை அடியோடு அகற்ற அறுமுகவனை அருணகிரிநாதர் வேண்டுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் போர்க்களம் தான். வேலவன் துணை இருந்தாலோ என்றும் வெற்றி முதக்கம் தான் என அக ஒளி பாய்ச்சும் பாடல். "தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் தனதான என வள்ளியின் துள்ளல் நடை போன்ற சந்தம்.
அல்லி விழியாலும் முல்லை நகையாலும்
அல்லல் பட ஆசைக் ..... கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ள வினையார்
விளக்கம் : இளமையின் போர்க்களம் பெண்ணாசை. அல்லி இதழ் போன்ற விழிகள் முல்லை மலர் போன்ற சிரிப்பு எனப் பொது மகளிரைப் புகழ்ந்து மது உண்ட வண்டாகி, ஆனந்த அலைகடல் என நினைத்து துயரக் கடல் விழுந்து துடிதுடிக்கும் நிலை. கனத்த இருள் தொகுதி போன்ற குணக்கேடுகளும் செயல்களும் கொண்ட அவர்களால் நிலை குலைந்தது போதாதோ கந்தா — என மனம் நொந்து முறையிடுகிறார்.
....அத்..... தனமாரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
இரண்டாவது போர்க்களம் மண்ணாசை, பொன்னாசை பற்றுக்கள். இன்னும் இன்னும் என்று பொன்னை, பொருளை, வீட்டைச் சேர்த்துச் சேர்த்து திருப்தியே இல்லாமல் உடலும் உள்ளமும் தளரும் நிலை. பாதுகாப்பு வளையம் என நினைத்த மனைவி, மக்கள் உற்றம் சுற்றமெல்லாம் விலகி நிற்க அது ஒரு மாயக் கோட்டை என்ற தெளிவு வந்து கலக்கும் நிலை.
வல்லெருமை மாயச் ......சமனாரும்
எள்ளி என தாவி கொள்ளை கொளும் நாளில்
உய்ய நீ ஒரு பொற் .......கழல் தாராய்
இறுதிச் சுற்று. பெருத்த, கருத்த, வலிய எருமை ஏறி வரும் எமனாருடன் 'அற்ப மானுடன் நீ. உன்னுடையது என்று நீ நினைத்த உயிர் என்னுடையது' என இகழ்ச்சியாய் என் ஜீவனை அவன் பறிக்க நீ விடுவாயோ வேலவா! அவனைத் தடுத்து, என்னைத் தடுத்தாட் கொள்ள உன் இணையற்ற திருவடி நிழல்
தருவாய், எனச் சாவணனிடம் சரண் அடைகிறார். அடுத்து அவன் புகழ் பாடிப்பரவசமாகும் நிலை.
தொல்லை மறை தேடி இல்லை எனும் நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
வேல் தொட்டு சூரர் கதை முடித்து, தேவர்களை வாழ வைத்த கருணையே, இனிய வள்ளிக் கிழங்குகள் நிறைந்த வள்ளிமலைச் சாரலில் மனதுக்கு இனிய வள்ளியுடன் மகிழ்ந்திருந்து எம் வாழ்வை இனிதாக்கும்
வள்ளி மணவாளா, சரணம்.
எல்லா நதிநீரும் கடலில் கலப்பதையே தம் ஓட்டத்தின் எல்லையாக, வகுத்துக் கொண்ட சத்தியமாக, செயல்படுகின்றன. அவற்றின் பாதைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம், காடு மேடாக இருக்கலாம், கரடுமுரடாக இருக்கலாம், தெளிந்த நீராய் ஓடலாம், கலங்கிக் குழம்பலாம். அப்படித்தான் வெவ்வேறு சமய நெறிகளும் அமைந்திருக்கின்றன. ஆனால் இறைவனையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தத்துவம் புரியாமல் தடுமாறித் திரிவோர் உண்டு. இதில் ஜபம் செயல்வதும் தவம் செய்வதும் மிகக் கடின வழிகள். அதில் மீண்டு வந்து, இலக்கை அடைய முடியுமா என மலைத்து நிற்போரும் உண்டு. பக்தியும் ஞானமும் கலந்த பாதை தான் ராஜபாட்டை. அந்த நன்னெறியில் தன்னைச் சேர்த்து விட வேண்டும் என்று அருணகிரியார் அந்த ஞான பண்டிதனாம் முருகனை வேண்டும் பாடல்.
காவி உடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும் ... தடுமாறி
காய்கனி துயத்தும் காயம் ஒறுத்தும்
காசினி முற்றும்.....திரியாதே
விளக்கம் : சமய நெறிகளில் துறவு மார்க்கம் மிகக் கடினமாகத் தோன்றுகிறதே ஷண்முகா! காஷாயம் என்று சொல்லும் காவி உடை அணிந்து கொண்டும், நீண்ட முடி வளர்த்துக் கொண்டும், நிலையாக ஒரு இடத்தில் இல்லாமல், காட்டிலும், மேட்டிலும், நாட்டின் பல பாகங்களிலும் அலைந்து திரிகிறார்கள் சந்நியாசிகள். அறுசுவை உண்டிகள் தேடாமல் காய் கனிகளை உண்டு வாழ்பவர்கள். ஜபம், தவம் என்று உடலை வருத்திக் கொள்பவர்கள். இந்த மார்க்கம் கரடு முரடென்று பாதியில் விட்டு விடும் அபாயமும் இருக்கிறது. இன்பமயமான இறை உணர்வுக்குப் பதிலாக இலக்கில்லாமல் அலையும் நிலையும் வரலாம். அதற்கெல்லாம் தகுதியும் தரமும் வேண்டுமே முருகா. இல்லாவிட்டால் அலையெல்லாம் புறத்தோற்றங்களாகவே இருந்து விடுமே! உன்னை நோக்கி முன்னேறும் வழி அடைபட்டுப் போகுமே! உன்னையே நினைத்திருக்கும் அடிமையைப் பக்தி மார்க்கத்தில் சேர்த்து விடு.
ஜீவனொடுக்கம் பூதவொடுக்கம்
தேற உதிக்கும்....பரஞான
தீப விளக்கம் காண எனக்குன்
சீதள பத்மம்.... தருவாயே
அன்று நீ என்னுளே தோன்றத் செய்த ஞானப் பொறியால் ஒன்றைப் புரிந்து கொண்டேன் ஐயா! உன்னை அடைய வேண்டுமானால் முதலில் அடக்க வேண்டியது மனது. அங்குமிங்கும் நெறிகெட்டு, தறிகெட்டுத் திரிந்து, பொறிகளை ஏவி, ஆசைகளை கொழுந்து விட்டு எரியச் செய்து, அழிவுக்கு இழுக்கும் மனதை அடக்கி பூத ஒடுக்கம் என்ற புலனடக்கம் கற்று விட்டால், ஜீவன் குறுகி சிவனாகி விடும் - அதாவது சிவமயமாகிவிடும் - பேறு கிட்டாதோ! அதற்கு ஞான விளக்கு என்னுளே ஏற்றப் படவேண்டும். அது ஒருநாள் மெய்ஞானமாம் சிவஞானம் தந்து விடாதோ! பரதத்துவம், பல பலவென்ற விடியல் போல் ஏழைக்குப் புரிபட்டு விடாதோ? இதையெல்லாம் ஏழைக்கு அருள்வது உன் தண்மையான தாமரைப் பாதம் அல்லவா! அந்தப் பாதங்களைப் பற்றுகிறேன்.
விளக்கம் : பாவமே உருவெடுத்து வந்தவராக, விண்ணையும் மண்ணையும் ஆட்டிப்படைத்த தாரகாசுரன் போன்ற அசுரர்களின் வர்க்கத்தையே அழித்துவிட சினம் கொண்டு சீறி வந்த சுத்த வீரா, முருகா! போர்க்களத்தில் உன் வெற்றி முழக்கம் கேட்டு, கைகள் கொட்டி, மகிழ்ச்சியின் உச்சத்தில் ஏதேதோ உளறும் பூத கணங்கள், பேய்க்கணங்கள் இவற்றின் பிதற்றலைக் கூட, போர்க்களக் கூத்துக்களின் ஒரு பகுதியாக ஏற்று ரசிக்கும் வேலாயுதா !
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும் ....புலியூரா
விளக்கம் : அன்னங்கள் நிறைந்த வயல்களால் சுற்றி வளைக்கப்பட்ட, சோலைகள் அடர்ந்த, வளம் கொழிக்கும் புலியூராம் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் குமரா! சிதம்பர நாதனின் செல்வா
சூரர் மிகக் கொண்டாட நடிக்கும்
தோகை நடத்தும்......பெருமாளே
விளக்கம் : போர்க்களத்தில் நீ மயில் நடத்தும் அழகைப் பார்த்து உன் எதிரிகளாம் சூரர்களே வியந்து கொண்டாடும் லாவகம் என்ன, வேகம் என்ன, வீரம் என்ன! முருகா! போர்க் கலையில் கூடச்
சிறந்து ஜொலிக்கும் செவ்வேளே, சரணம்.
முருக பக்தியால் புடமிடப்பட்ட அருணகிரிநாதர், அரிய ஆன்மீக தாகத்தின் வெளிப்பாடாக வேதநெறி நடக்கவும், கீத விநோதங்கள் கற்கவும், அறிவாற்றல் பெருகவும், அது மெதுவேே மெய்ஞான ஒளிப் பாதையில் சேர்க்கவும், மெய்ஞானமே தந்து விடவும், முக்திக்கு வித்தாகும் முருகப் பெருமானை வேண்டும் பாடல். அந்த ஒளிமழையில் நனையாமல், பெண் மோகம் என்னும் இருளிலே விழுந்து கிடந்த தன்னை மன்னித்து உய்விக்க வேண்டுமென, வள்ளி தேவசேனா மணாளனை சொல்லில் வல்ல அருணகிரியார் வேண்டும் பாடல்.
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்புதந்தனில் குரம்பை கொண்டு நாளும்
விளக்கம் : மாயையை அடித்தளமாகக் கொண்டு, பஞ்ச பூதங்களால் கட்டப்பட்ட குடிசை தான் இந்த உடல். நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இந்த உடலில் கர்வம் கொண்டு, மோகத்தில் மூழ்கி இருந்தவனை மன்னிப்பாய் முருகா!
காசிலாசை தேடி வாழ்வினை நாடி
யிந்த்திரிய ப்ரமந்த தடித்தலைந்து.....சிந்தை வேறாய்
விளக்கம் : இந்த இழிந்த உடலைப் பேணி, இந்த்ரிய சுகங்களுக்காக அலைபாய்ந்து,
அதற்காகவே காசு பொருள் தேடிய கீழான பிறவி நான். மனம் சிதறிக் கலங்கிப் போன சிறியன்.
விளக்கம் : அழகா, குமரா! உன் எழிலை வர்ணிப்பதற்கு பதிலாக, மூங்கில் போன்ற தோள்களும், தாமரை போன்ற அங்க லாவண்யங்களும் கொண்டவர்கள் என மாதரிடம் மயங்கிக் கிடந்த இழிநிலை போதுமய்யா!
வேத கீத மோன மெய்ஞான நந்த
முற்றிடு இன்பமுத்தி யொன்று.....தந்திடாயோ
விளக்கம் : வேதநெறியில் என்னை நடக்க வைப்பாய் வேலவா! நாத உபாசகர்கள் போல், உன்னை கீதத்தால் மகிழ்விக்க வேண்டும். மனம் சமநிலைக்கு வந்து, தியானத்தில் ஈடுபடும் பக்குவம் கிடைக்க வேண்டும். உன்னை நோக்கி மேலும் மேலும் முன்னேறி, ஒருநாள் மெய்ஞானமும், ஆனந்தமும் பெறும் பேறு கிட்டவேண்டும் - அந்தப் பேரானந்தத்தின் கனிந்த நிலையாம் முக்திக்கு வித்தானவனே, கருணையின் உருவே எளியோனுக்கும் ஒருநாள் மோட்ச வாசல் திறக்க மாட்டாயா!
மாய வீர தீரசூர்கள் பாற நின்ற
விக்ரமங் கொள் வெற்பிடந்த .....செங்கை வேலா
விளக்கம் : மாயப் போர் புரிந்துகொண்டு, வீரரென்றும், தீரரென்றும் மார்தட்டிக் கொண்டு வந்த சூரர்களை வீழத்தி வெற்றிகொண்டவனே! உன் தாமரைக் கரத்தால் வேலெடுத்து க்ரவுஞ்ச மலை தொட்டாய். அது பொடிப் பொடியானது
விளக்கம் : வெற்றி வாகை சூடும் வேடர் தலைவன் வளர்த்த குறவஞ்சிக் கொடியின் அன்பனே!
வெள்ளை யானை வளர்த்த தெய்வானையின் மணவாளனாய்க் பரங்குன்றத்தில் தரிசனம் தரும் பரமா! தேவியர் இருவரும் இருபுறமும் வர மழை பொழிய நிற்கும் அருளாளா !
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்
தழங்க முட்ட நின்று....துன்று சோதீ
விளக்கம் : ப்ரணவ நாதமாய், நுணுக்கமான வேத கீதங்களின் உட்பொருளாய், பஞ்சாட்சர சாரத்தையும் உள்ளடக்கிய உயர் பொருளாய், ஜோதிமயமாய் நிற்கும் சரவணா!
ஐயன் சிவபெருமான் ஆனந்த நடனம் புரியும் பொன்னம்பலத் திருத்தலமாம் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் எம் தலைவா, முருகா சரணம்.
ஜனன மரணச் சுழற்சியில் சிக்கிய ஜீவனுக்குத்தான் எத்தனை எத்தனை பிறவிகள்! அதிலிருந்து விடுபடத் தவிக்கிறார் அருணகிரிநாதர். முருகன் திருப்பாதங்கள் தான் அதை அருள முடியும் என உணர்ந்து கொண்ட தூய முருக பக்தியில் உருகுகிறார். தான் அவன் அடிமை என நெகிழ்ந்து போகிறார்.
எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர் பிறவி ....அவதாரம்
விளக்கம் : ஏழுகடல்களின் கரைகளில் பரவியுள்ள நுண் மணல்களின் எண்ணிக்கையை விட நான் எடுத்த பிறவிகள் அதிகம் இருக்குமே முருகையா! அவற்றை எண்ணி மகிழ என்ன இருக்கிறது ஐயா! அவை துன்ப மயமானவை அல்லவா !
இனி உன தபயம் எனது உயிரும் உடலும்
இனி உடல் விடுக ...முடியாது
விளக்கம் : இந்த ஜீவன் உனது அபயம் சரவணா ! ஏழையை மீட்பாய். உயிரும் உடலும் சேர்ந்து சேர்ந்து எடுத்த பிறவிகளால் சோர்ந்து விட்டேன் முருகா!
கழுகொடு நரியும் எரி புவி மறலி
கமலனும் மிகவும் ....அயர்வானார்
விளக்கம் : நரியும் கழுகும் அக்னியும் மண்ணும் உண்ணும் இந்த அற்பமான என் உடலைப் படைத்துப் படைத்து பிரம்மனும், அதைப் பறித்துப் பறித்து யமனும் கூட அலுத்துப் போயிருப்பார்கள் - இன்னும் வேண்டுமோ பிறவி !
கடன் உனதபயம் அடிமை உன் அடிமை
கடுகி உனதடிகள்..... தருவாயே
விளக்கம் : உன்னையே சரணடைந்து விட்ட இந்த அடிமையைக் காப்பது உன் பொறுப்பல்லவா !
விரைந்து வந்து உன் பொற்பாதங்களில் அடைக்கலம் தருவாய் அருளாளா!
விளக்கம் : மிகச் சிறந்த அழகின் இலக்கணமாக எழில் சிந்துபவளும், மரகதத் தகதகப்புடன் பச்சை வண்ணத்தில் பொலிபவளும், தூயவளும் ஆன அந்தப் பராசக்தியின் செல்வப் புதல்வா! குமரா !
விரிதலம் எரிய குலகிரி நெரிய
விசை பெறு மயிலில் ....வருவோனே
விளக்கம் : பரந்த இந்த பூமியே பற்றி எரிவது போன்ற வேகத்துடன் விரைகின்ற வண்ண மயில் ஏறி வருபவனே! க்ரவுஞ்சம் தொட்டுப் பொடி பொடி ஆக்கிய வீரத்தின் சின்னமே !
விளக்கம் : கடலெல்லாம் கொந்தளிக்கச் சூரன் உயிர் குடித்து, அசுரர்களை ஒட்டுமொத்தமாய், அழித்து, வெற்றி முழக்கிய வேலைத் திருக்கரத்தில் தாங்கிய தலைவா !
இமையவர் முனிவர் பரவிய
புலியூரினில் நடமருவு .... பெருமாளே
விளக்கம் : விண்ணோரும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் போற்றிப் பரவும் தில்லைக் கூத்தனின் பிரதிபலிப்பாய், சிதம்பரமாம் புலியூரில் ஆனந்த நடனம் புரியும் அறுமுகவா, சரணம்.
"முருகையா! திருவண்ணாமலையில், உன் திருவருளால் நனைக்கப்பட்ட ஏழை, உன் ஆணைப்படி வயலூர் வந்து இருக்கிறேன், உன் தரிசனம் தருவாய்" என ஏங்குகிறார் அருணகிரிநாதர். தன் வேலால் ஒரு பொய்கை ஏற்படுத்திச் சரவணன் தரிசனம் தருகிறான். "சொற்களுக்குள் அடக்க முடியா உன் அரிய திருப்புகழை எப்படி எளியேன் பாடுவேன்" என அருணகிரியார் மலைக்கிறார்.
"என் அயிலை, மயிலை, சேவலை, நீ கண்ட என் தரிசனத்தை, தமிழில் தோய்த்துப் பாடு. அதற்கு முன்னால் என் ஜேஷ்டனாம், பொய்யா கணபதியின் அருளை வேண்டிப் பெற்றுக் கொள் " என அன்புக் கட்டளை இடுகிறான். விக்ன விநாயகனின் தரிசனம் ஆகிறது. கருத்துகள் மின்னி வருகின்றன. தமிழ் ஊற்றுத் திறக்கிறது. திருப்புகழ் க்ரந்தம் சந்த மணத்துடன் மலர்கிறது.
பக்கரை விசித்ர மணி பொற்கலணை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும்
நீபப் பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்
திக்கது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரு
சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய் பதியும் வைத்து திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கருள்கை மறவேனே
விளக்கம் : வயலூரின் வாழ்வே முருகா! உன் ஆணைப்படி ஏழை இந்த வயலூருக்கு வந்திருக்கிறேன்.
சொல்லிலே அடங்காத உன் திருப்புகழை எப்படிப் பாடுவேன் என்று மலைத்த பொழுது , சரணக் கமலாலயமாம் மணம் கமழும் உன் மென்மலர்ப் பாதங்களை, கிரவுஞ்சம் துளைத்த உன் வேலை, அழகிய லாடமும் மணிமாலைகளும் பொன்னால் ஆன சேணமும் பூண்டு மிடுக்குடன் நடை பயிலும் வேகப் புரவி போன்ற உன் வண்ணமயிலை, வெற்றி முழக்கம் செய்து வரும் உன் சேவலை, கடம்ப மாலை பொலியும் உன் பன்னிரு திண் தோள்களை, இந்தச் சிறந்த வயலூர் ஸ்தலத்தை பக்தியுடன் பாடும் படி பணித்த பரம தயாளா! அதற்கு அருள் மாரி பொழிந்து, விக்னம் ஏதும் இல்லாமல் பாட வைத்த உன் தெய்வ சகோதரனை மறப்பேனோ !
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப் பருப்புடன் நெய்
எட் பொரி அவல் துவரை இளநீர்
வண்டெச்சில் பயற் அப்ப வகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழம் இடிப்பல் வகை தனி மூலம்
விளக்கம் : கணநாதா ! எளிமையின் உருவே! கருணையில் பெரியோனே! ஏழைகள் உனக்கு நைவேத்தியம் என்று படைக்கும் சாதாரணப் பொருட்களைக் கூட விருப்புடன் ஏற்றுக் கொள்ளும் ஏற்றமே! கரும்புத் துண்டு, பழங்கள் , சர்க்கரை, பருப்பு, நெய் , எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டுகளின் உணவான தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசிப் பிட்டு, வெள்ளரிப் பழம், மாவு வகைகள், கிழங்குகள்,
மிக்க அடி சிற்கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கின சமர்த்தனனெனும் அருளாழி
விளக்கம் : அன்னம், கடலை, என நிலத்தில் விளைந்து வருபவற்றை எல்லாம் உனக்குப் படைக்கும் பக்தர்களின் அன்பையே பெரிதாக நினைத்து, அரிய பட்சண வகைகளாக அந்த எளிய பொருட்களை ஏற்றுக் கொண்டு பெருங்கருணை புரியும் அருட்கடலே, தடைகளை எல்லாம் நீங்கும் விக்ன விநாயகா!
விளக்கம் : கயிலை நாதனாய், ஜடாமுடியராய், மேருவை வில்லாய் வளைத்துப் போர் தொடுக்க வல்லவராய், உலகத்துக்கே தந்தையாக விளங்கும் சிவனாரின் செல்வக் கணபதியே! அனைத்திலும் வல்லவரே! ஒரு தந்தம் ஒடித்து மகாபாரதம் எழுதி, ஒறறை மருப்புடன் விளங்கும் ஒப்பற்ற மகா கணபதியே, சரணம்.
முருகப் பெருமான் அருணகிரிநாதர் என்ற பழைய அடிமைக்கு "முத்தைத் தரு" என்று அடி எடுத்துக் கொடுத்த அற்புதமான பாடல். அது முருகனின் எல்லையற்ற கருணையை உலகுக்கே எடுத்துக் கூறுகிறது. அருணகிரிநாதரிடமிருந்து உருகிப் பெருகிய திருப்புகழின் ஊற்றுக் கண் அது. திருவண்ணாமலை கோபுர உச்சியிலிருந்து விழுந்து, உயிரை மாய்த்துக் கொள்ளப் போன அருணகிரியாரைக் கந்தன் தாங்கிக் கொண்டான். மறுவாழ்வு கொடுத்தான். ஞானத்தை ஊட்டி விட்டான். உலகமே புத்துணர்வு கொள்ள வழிகாட்டி விட்டான். பகதியின் இலக்கணத்தைப் பரப்பி விட்டான். அருணகிரிநாதரைப் போலவே அனைவரும் ஆனந்த சாகரத்தில் திளைக்கும் பாடல். ஏனென்றால் இது முத்துக் குமரன் முத்து முத்தாய் எழிற் கோலமிட்ட இணையற்ற பாடல்.
விளக்கம் : யாருடைய நெற்றிக் கண் பொறியிலிருந்து உதித்தானோ, அந்த முக்கண்ணரே அவனை ஸ்வாமிநாதனாய் ஏற்றுக் கொள்ள, அவர் மனம் மகிழும் வண்ணம், வேதத்தின் ஆதியாய், அந்தமாய், சாரமாய் விளங்கும் ப்ரணவத்தின் பொருளை அவருக்கு உபதேசமாய் எடுத்துச் சொன்ன ஞானகுருவாவன். பிரம்மனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவரும் துதித்துப் போற்றும் தேவாதி தேவன்.
பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் .... இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது......ஒருநாளே
விளக்கம் : பச்சை மாமலை போல் திருமேனி கொண்டு, புயலாய்ப் பரந்து வந்து பக்தரைக் காக்கும் இவன் மாமன் நடத்தாத லீலைகளா! ஒரு பாணம், ஒரு தாரம் எனக் கீர்த்தி பெற்று ராவணாதிகளைச் சூறையாடிய வில்வேந்தன் ராமனாக, மந்தர மலையையே மத்தாக்கி, பாற்கடல் கடைய வைத்துத் தேவருக்கு அமுதம் வழங்கிவிட்ட பரந்தாமனாக பாரதப் போர்க்களத்தில் சாகசங்கள் பல புரிந்த ஸ்ரீகிருஷ்ணனாக வந்தவனல்லவா அந்தக் காக்கும் கடவுள்! பார்த்தன் எனும் பக்தனுக்காக சாரதியாய் வந்து தேரோட்டிய எளிமையின் சின்னம். அதர்மத்தின் பக்கம் நின்று கொண்டு, ஆனாலும் துணிச்சலாய் அன்று மாலைக்குள் அர்ஜுனன் கதை முடிப்பேன் அல்லது இறந்து படுவேன் எனச் சூளுரைதது வெறியுடன் போராடிய எதிரியை வீழ்த்தவென்று தன் சக்ராயுதத்தால் சூரியனையே மறைத்து, அன்றைய போர் முடிந்தது போல், இருள் சூழ்ந்தது போல், காட்டிய தர்மத்தின் தலைவன் கண்ணன். அந்த மாயோனே மகிழ்ந்து போற்றும் அவனுடைய அன்பான மருகா! முருகா! இந்த ஏழையருக்கு இரங்கி, என்றென்றும் காக்க வேண்டும் என இறைஞ்சுகிறோம்.
அடுத்துச் செவ்வேளின் போர்க்கள சாகசங்கள் விழி முன்னே விரியும் பகுதி.
விளக்கம்: இதற்கெல்லாம் ஏற்றவாறு தாளகதியில் போர்ப் பறைகள் முழங்கிக் கொண்டிருக்க, உற்சாகம் கொண்ட கிழக் கோட்டான்கள், குக்குக் குகுகுகு எனக்கூவிக் கொண்டு குத்து, புதை, புக்கு, பிடியெனச் சொல்வதுபோல் ஏதேதோ ஓசை எழுப்பிக் கொண்டு, மேலே எழும்பிச் சுற்றி வர
விளக்கம்: உக்ரப் போர் புரிந்து, அதர்மம் செய்த அசுரர் குலம் மீண்டும் தலையெடுக்காதவாறு வேரோடு சாயவும், அந்த வீணர்களைக் காத்து நின்ற மலைகள் எல்லாம் தவிடுபொடியாகவும், தர்மயுத்தம் புரிந்து வெற்றி முழக்கிய வேலாயுதா
எம் தலைவா, தேவா, சரணம் சரணம்.
இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாகவே கருதப்படுகிறது. ஆற்றலுள்ள மருந்தாக அமைந்து நோய் தீர்க்கும் பாடல். பாடப் பாட ரோகங்கள் தானே விலகிவிடும் அளவுக்குச் சக்தி வாய்ந்த பாடல். பாடியவர் பரமயோகியான அருணகிரிநாதர். காக்க நிற்பவனோ கருணையே உருவான கந்தவேள் எந்த நோய் தான் எதிர்த்து நிற்கும்? நல்ல பயன் விளைய தூய மனதுடன், நிறைந்த நம்பிக்கையுடன், பாடினால் நன்று. மற்றவர்களுக்காகவும், கூட்டு வழிபாடாகவும் பாடினால் இன்னும் சிறப்பு. மனிதர்கள் பல்வேறு வகையான நோய்களால் துன்பப்படுவதால் நீண்ட பட்டியலே தருகிறார். எந்தப் பிறவியிலும் நோய்க் கொடுமை வேண்டாம் என வேண்டுகின்ற பாடல். மனிதப் பிறவியில் தான் இந்த வேண்டுதல் சாத்தியமாகிறது.
இருமலு ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீரிழிவு
விளக்கம் : வேறு வேறு காரணங்களால் ஏற்பட்டு வெவ்வேறு விதமாகத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய், கை கால்கள் இழுத்துக்கொள்ளும் முயலகன் என்னும் வலிப்பு நோய், வாத நோய், விஷக்கிருமிகள் தாக்கி வரும் விஷ ஜூரம் போன்ற நோய்கள், நீரிழிவு நோய்.
விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
விளக்கம் : நீங்காமல் துன்புறுத்தும் பொறுக்க முடியாத தலைவலி, சிவப்பு அணுக்கள் குறைவால் வரும் ரத்தச் சோகை, கழுத்தைச் சுற்றிப் புற்றுப் போல் வருகின்ற கண்ட மாலை, இவற்றுடன்
பெருவயிறீளை எரி குலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
விளக்கம் : மகோதரம் என்னும் கொடிய ஈரல் வீக்கம், நுரையீரலின் கோழை நோய், நெஞ்செரிச்சல், தீராத தீவிர வயிற்று வலி தரும் சூலை நோய், இன்னும் இவை போல் மிகுந்த வலி தரும் நோய்கள்.
பிறவிகள் தோறும் எனை நலியாதபடி
உன தாள்கள் அருள்வாயே
விளக்கம் : எந்தப் பிறவியிலும் இந்த நோய்கள் எல்லாம் என்னைத் தாக்கி விடாதபடி காத்தருள்வாய் முருகா, உன் தாள் பணிந்தேன். தீய சக்திகளை வேரறுக்கும் வேலனுக்கு, நோய்களை அழிப்பதும் கைவந்த கலைதான் என்று உணர்த்துவது போல, அடுத்த பகுதியில் போர்க்களக்காட்சி.
வருமொரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசை பாடி
வருமொரு கால வயிரவராட
வடி சுடர் வேலை விடுவோனே
விளக்கம் : அசுரர்களின் கோடிக்கணக்கான காலாட்படை வீரர்கள் மடிந்து விழவும், தீய சக்திகள் அழிவதால் ஆனந்தம் கொண்ட கால பைரவர் (சிவன் அம்சம்) இசை பாடிக் கொண்டு வந்து போர்க்களத்தில் நடனம் ஆடவும், ஒளி சிந்தும்
கூரிய வேலை எறிந்து வெற்றி கொண்ட வேலா!
தரு நிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
விளக்கம் : கற்பகச் சோலைகள் நிறைந்து நிழல் தரும் இந்திரலோகத்தில், தேவராஜன் வளர்த்த, பேரெழில் கொண்ட, தெய்வானையின் மணவாளா!
சலமிடை பூவின் நடு வினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே
விளக்கம் : கடல் சூழ்ந்த உலகின் மையப்பகுதியாகச் சிறப்புடன் துலங்கும் திருத்தணிகை மலை மேல் கோயில் கொண்டிருக்கும் கருணா மூர்த்தியே, முருகா, சரணம்.
திருப்புகழின் மணம் பாரெங்கும் வீசி தூய பக்தியைப் பரப்பப் போகிறது என்பதற்கு அறிகுறியாய் அமைந்த சிறந்த பாடல். "பத்தர் கணப்ரிய" என்ற கனமான சொற்களின் ப்ரயோகம். திருவண்ணாமலையில் உடலும் உள்ளமும் தேறி, முருகன் சொற்படி சமாதி நிலையில் சும்மா இருந்த அருணகிரியார், தல யாத்திரை தொடங்குகிறார். முருகன் ஆணைப்படி, வயலூர் வந்து, விராலிமலையில் படைப்பாற்றல் விஞ்சி, பல பாடல்களை இயற்றிப் பாடிக்கொண்டு வருகிறார். திருச்செங்கோட்டில் உடல் சிலிர்க்கும் அனுபவம். திக்கெட்டிலும் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து, அருணகிரியாருடன் பாடிக்கொண்டே செல்லும் புதிய அனுபவம். பக்த கணம் என்று சொல்லி, அவர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டுகிறார். அந்த தூய பக்தர்களுக்கு முருகன் மிகப்ரியமானவன் ஆகி விடுகின்றான். முகமூடி போட்டுக் கொள்ளும் போலி பக்தர்களை அவன் திரும்பியும் பார்ப்பதில்லை. பாவிகளைக் கூட மன்னித்து விடுவான். வேஷம் போட்டும் பக்தர்களை மன்னிப்பதில்லை. அப்படி எதிரிலாத பக்தியை அவர்கள் நெஞ்சங்களில் பதிக்கும் அளவிற்குச் சந்தம் தந்து, பாடல்கள் தந்து முருகபக்தியின் க்ரந்தமாகத் திருப்புகழை படைககச் செய்த ஆறுமுகனை நினைந்து நினைந்து அருணகிரிநாதர் பரவசக் கடலாடும் பாடல்.
பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு
பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதம் எனவோதும்
விளக்கம் : முருகையா ! உன் அருளை என்னவென்று சொல்வேன்! கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று எந்த திசை திரும்பினாலும் உன் பக்தர் கூட்டம் . "அறபுதம், அற்புதம் என்று பிரமித்து உன் புகழ் பாடும் ஆனந்த அனுபவம். மயில் நடத்தி வரும் மாமணியே! அவர்கள் இதயத்தில் நிரந்தரமாய் குடிகொண்டு விட்ட குகனே!
சித்ர கவித்துவ சத்த மிகுத்த
திருப்புகழைச் சிறிது அடியேனும்
செப்பென வைத்து உலகிற் பரவத்
தெரிசித்த அநுக்ரஹ மறவேனே
விளக்கம் : உன் தரிசனம் தந்து, மிக இனிய சந்தங்கள் தந்து, கவித்துவம் பொங்கும் தமிழ் தந்து, "என் புகழை நீ பாடு" என ஊக்கம் தந்து, முத்து முததாய் அடி எடுத்துக் கொடுத்து, முடிந்த அளவு பாடு என்று அன்பால் அருளால் நனைத்து உன் புகழ் உலகம் முழுதும் பரவ வழிசெய்த பேரின்பமே, எளியேன் உருகுகிறேன் முருகா!
கத்திய தத்தை களைத்து விழத் திரி
கற்கவண் விட்டெறிதினை காவல்
கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி
கட்டி அணைத்த பனிரு தோளா
விளக்கம் : தினைப் புனத்தில் கவண் எறிந்து, கிளிகளை விரட்டிக்கொண்டு இருந்த எளிய, அழகிய வள்ளி மயிலாளை அன்போடு அணைத்துக் கொண்ட பன்னிரு புயத்தோனே!
சத்தியை ஒத்த இடத்தினில் வைத்த
தகப்பனும் மெச்சிடமறைநூலின்
தத்துவ தற்பர முற்று முணர்த்திய
சரப்ப கிரிச்சுரர் பெருமாளே
விளக்கம் : தனக்குச் சரிசமமாக, ஆதிசக்திக்கு உரிய இடப்பாகம் தந்த சிவனார் மகிழ்ந்து போற்றும் அளவுக்கு, வேதத்தின் சாரமான ப்ரணவத்தை உபதேசம் செய்த பரம குரு நாதா! நாகமலையில் கோயில் கொண்டு, பக்தரைக் காக்கும் பரம தயாளா! சரணம்.
You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same. வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை: 1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு, 2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு. முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லம...
Comments
Post a Comment