வேடிச்சி காவலன் வகுப்பு
By Mrs Janaki Ramanan, Pune முன்னுரை விளக்கிட முடியாத தத்துவப் பொருளாக விளங்குபவன் முருகன். அவன் அருளிலே திளைத்து, அவன் உபதேசித்த ஞானத்திலே குளித்து, அவன் மேல் வைத்த பக்தியிலே உருகிய அருணகிரிநாதருக்கு அவனை முருக பக்தர்களுக்கு ஓரளவாவது பரிச்சியம் செய்து விட வேண்டுமென்ற ஆர்வம். ஆயிரமாயிரம் திருப்புகழ்கள் இயற்றியும் ஆர்வம் அடங்கவில்லை. வேல் வகுப்பு என்றும், சீர் பாத வகுப்பு என்றும் வேடிச்சி காவலன் வகுப்பு என்றும், அவன் மகிமைகளைப் பாடிப் பாடித் தெளிவாக்க முனைந்தார். ஒரு வகுப்பு என்று எடுத்துக் கொண்டால், முருகன் பற்றிய ஒரு விஷயத்தைப் பகுத்துப் பகுத்து எடுத்துச் சொல்வது. உதாரணமாக புய வகுப்பில், அவன் புயங்களின் எழிலை, வலிமையை, வீரத்தை, தீரத்தை, அலங்காரத்தை, கருணையை, அழகான கோணங்களில் வரி வரியாய்ப் பாடுவது. வேடிச்சி காவலன் வகுப்பு விளக்குவது என்ன? முருகன் தான் முழு முதற் கடவுளான மெய்ப்பொருளாம் பரம்பொருள் என்பதையும், வேதத்தின் நாதம் என்பதையும், வேடர் குலப் பெண்ணான வள்ளி ஜீவாத்மா என்பதையும், அந்த ஜீவாத்மாவுக்குக் காவலனாய், வேடனாய், வேலைாய், விருத்தனாய் வந்து அவளை ஆட்கொண்ட பரமாத்மாவான ஷண்முக ...